புது வருடத்திய பிரச்சினைகள்....
அனைவருக்கும் புது வருட வாழ்த்துகள்.
எல்லோரும் தலை தாழ்த்தி, நிலத்தை முத்தமிட்டு இறைவனை சரணடைந்து கொண்டிருந்த பொழுது, சாத்தான் தன் இருப்பை அறிவித்தான். சத்தாம் ஹுஸைனை தூக்கிலிட சந்தர்ப்பம் இது தானா, புஷ்ஷிற்கு?
நேர்மையான விசாரணை கிடையாது. தான் விரும்பிய ஒரு பொம்மை அரசை மக்கள் மீது திணித்து தனது Democratic Outlookஐ அமெரிக்கா உலகிற்கு அம்பலப்படுத்தி இருக்கிறது.
என்ன தான் இருந்தாலும் சத்தாம் ஒரு கொடுங்கோலன் தானே, அவன் தண்டிக்கப்பட வேண்டியவன் தானே என அமெரிக்க அடிவருடிகள் நிச்சயம் குரல் எழுப்பத் தான் செய்வார்கள்.
தண்டிக்கத் தான் படவேண்டும். ஆனால் அந்த நாட்டின் மக்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால். பொம்மைகளைக் கொண்டு அல்ல. அது வரையிலும் காத்திருக்க வேண்டியது மிக அவசியம்.
அமெரிக்காவிற்கு இதில் எந்த உரிமையும் கிடையாது. தங்களுடைய செய்கைகளுக்கு ஒரு நியாயம் கற்பிக்க, எப்படியாவது தங்களின் ஆக்கிரமிப்பை, இராக்கில் தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்ள என பல காரணங்களால் அவதியுற்ற அமெரிக்காவும் அவர்களது அடிவருடிகளும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றிய நாடகங்கள் தாம் இவை.
# WMD - அழிவு சாதனங்கள் இருப்பு என பொய். கடைசி வரையிலும் ஒரு கிராம் எடையளவுள்ள அழிவு பொருட்களைக் கண்டு பிடிக்க இயலவில்லை.
#அல் கொய்தா தொடர்பு - விழுந்து புரண்டு தேடியும் சதாம்மை அல் கொய்தாவுடன் இணைத்துப் பேச முடியவில்லை.
உலக நாடுகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாகிறோமே என்ற கவலையில் கடைசியாக கையில் எடுத்தது தான் - ஷியா படுகொலைகள். ஒரு ஆட்சியாளன் என்ற முறையில் கிளர்ச்சியை அடக்கும் உரிமை கிடையாதா என்ன?
சரி. அவற்றிற்கு தண்டனை உண்டு என்று ஏற்றுக் கொண்டால், புஷ் தன் ஆக்கிரமிப்பின் மூலம் இராக் மக்களுக்கு இழைத்த கொடுமைகளைப் பாருங்கள்::
# சாவு எண்ணிக்கை ---- 654,965
# அகதிகளாக
ஜோர்டானில் -- 700,000
சிரியாவில் -- 600,000
எகிப்தில் -- 100,000
ஈரானில் -- 54,000
லெபானானில்- 20,000
(தகவல்: 1.1.07 தேதியிட்ட Gulf News / Edward M Kennedy in Los Angels Time)
எத்தனை பேர் சத்தாமால் அவதியுற்றார்கள்? 188 பேர்? எத்தனை பேர் அகதிகளாக ஓடிப் போயினர் - 5000?? 10000??
அப்படியென்றால் இராக் மக்களை புஷ் மற்றும் அவரது அடிவருடிகள் எத்தனை எத்தனை கொடுமைக்குள்ளாக்கியுள்ளனர்.? இவர்களை எத்தனை தடவை தூக்கில் தொங்க விட்டால், அவர்கள் செய்த பாவம் போகும்?
ஏனென்றால், தூக்கிலிடப்பட்ட சத்தாம் ஏற்கனவே தன் இன மக்களிடையே ஒரு மாபெரும் நாயகனாக மாற்றப்பட்டுவிட்டார். சன்னி இன மக்கள் வாழும் ஒவ்வொரு ஊரிலும், அவருக்காக ஒரு சவப்பெட்டி ஊர்வலமும், தொழுகைகளும் நடத்தப்பட்டு விட்டன. அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட கூடம் "வீரத் தியாகி சத்தாம் ஹூசைன் கூடம்" என்று பெயரிடப்பட்டுவிட்டது.
ஆம் - மரணத்தில் கூட சத்தாமிடத்தில் புஷ் தோற்றுப் போனார். தன் வக்கிர புத்தியின் திருப்திக்காக தூக்கிலிட்டு, அவமானப்படுத்தி கொல்ல வேண்டும் என்று நினைத்த புஷ், இறுதியில் அவரது இன மக்களது பார்வையில் ஒரு மாபெரும் வீரனாகவும், எதிரிகளிடத்தில் வீரமரணம் அடைந்ததாகவும் ஒரு நாயக அந்தஸ்தை தேடிக் கொடுத்து விட்டார்.
சரி இனி புதுவருடத்தில் இந்த உலகின் முக்கிய பிரச்சினைகள் - புலம் பெயர்ந்த இந்த பதினைந்து லட்சம் இராக்கிகளின் புனர்வாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவரையிலும், அமெரிக்கா 202 பேருக்குத் தான் குடியுரிமை வழங்கி உள்ளது. மீதமுள்ளவர்களின் கதி? அது ஜோர்டான், சிரியா, எகிப்து, லெபனான் இவர்களது தலைவலியாக மாறக்கூடும். அதாவது, அகதிகளாக அவதியுற்று, வெறுப்புற்று நிற்கும் இந்த மக்கள் - தீவிரவாதத்திற்கு சரியான விளைநிலமாக மாறக்கூடும். ஆனால், இது ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருப்பது.
புது வருடத்தில் புதிதாக முளைக்கக்கூடிய பிரச்சினைகள் என்ன?
#1. இராக்கில் உள் நாட்டு போர் மூளும்?
சத்தாமை அழித்து விட்டதால், இராக் ஒரு போதும் இணக்கமான சூழ்நிலைக்கு மாறிவிடாது. சன்னி பிரிவினருக்கு ஆதரவாக சவுதி அரேபியா, ஷியாவிற்கு ஆதரவாக ஈரான் என இந்தப் பிரச்சினை மத்திய கிழக்கு முழுவதையும் ஒரு உச்ச பட்ச கொதிநிலையில் வைத்திருக்கக் கூடும். இத்தோடு கூட, குர்து இன மக்களுக்கு ஒரு தனி நிலம் கொடுக்கக் கூடாது என்பதில் துருக்கியும் முக்கிய பங்கு வகிக்கக் கூடும். மத்திய கிழக்கிற்கு இந்த வருடமும் கூட அமைதி திரும்பாது.
#2. ஈரானின் அணு உலைகள்:
எந்த ஒரு ஆட்சியாளானாலும், எங்கள் விருப்பத்திற்கிணங்க அவன் செயல்படாவிட்டால், எந்த ஒரு பொய் காரணத்தையாவாது சொல்லி, அவனது நாட்டை நிர்மூலமாக்கி, அவனையும் கொலை செய்வோம் என்று மத்திய கிழக்கு ஆட்சியாளார்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தி விட்டது. அந்த வரிசையில் அடுத்த இடம் பெற பெரிதும் வாய்ப்புள்ள நாடு :: ஈரான்.
தன் நாட்டில் விளையும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அடுத்த நாடுகளுக்கு விற்று அதை தனது வருமானமாக்கிக் கொண்டு, தனது உள்நாட்டுத் தேவைகளுக்காக மாற்று சக்திகளைத் தேடுவதற்கு ஈரானுக்கு உரிமை உண்டு. ஏன், as an alternative source of energy, nuclear power is the best possible way for any country. இந்த ரீதியில் ஈரானுடன் பேச முன் வராத அமெரிக்கா, தான் தன் இந்த உலகில் உள்ள அனைத்து சக்திகளுக்கும் அதிபதி என்ற வகையில் பேசவும் நடக்கவும் முற்படுவதே இப்பொழுது உலகம் எதிர்கொள்ளும் தீவிரவாதம். கவனிக்கத் தக்கது - சவூதி அரேபியாவும் இப்பொழுது அணு உலைகளில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. ஏனென்றால் உற்பத்தியாகும் எண்ணெயில், ஒரு கணிசமான தேவைக்காக உள்நாட்டிலே செலவிட வேண்டியதிருக்கிறது. எண்ணெய் மட்டும் தான் ஒரே மூல ஆதாராம் வருமானத்திற்கு என்கின்ற பொழுது, அதை சேமிக்க அதற்கு உரிமை உண்டு.
அமெரிக்கா அரபு நாடுகளுடன் கூட்டாக செயல்பட்டு, அணுசக்தியின் மூலம் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுமானால், அதனால் அமெரிக்காவிற்கும் ஆதாரம் உண்டு. அரபு நாடுகளுக்கும் ஆதாரம் உண்டு. ஆனால் அமெரிக்காவிற்கு அரபு நாடுகளின் நலனில் என்றுமே அக்கறை இருந்ததில்லை. அதன் நலன் முழுவதும் - இஸ்ரேல். இனவெறி பிடித்த அந்த நாட்டைப் பாதுகாப்பது மட்டுமே அதன் முழு நோக்கம். அணுஉலைகள் கிடைத்து விட்டால், ஆயுதங்கள் செய்வது சில மணிப்பொழுதே என்பது உண்மையென்றாலும், அத்தனை எளிதில் அதை அடுத்த நாட்டின் மீது வீசி விட முடியாது. ஏனென்றால், அதன் பின்னர், தங்கள் நாட்டில் ஒரு புல் பூண்டைக் கூட முளைக்க விடாமல் செய்து விடுவார்கள் என்பது அறிந்தே இருப்பார்கள் அனைவரும். அதனால், அவர்களாக முனைந்து அந்த அறிவைப் பெற்றுக் கொள்வதை விட, அதை அவர்களுக்கு நேர்மையான முறையில் கொடுத்து, அதை கண்காணிக்கும் பொறுப்பை அல்லது நிர்வகிக்கும் பொறுப்பை தங்கள் வசம் வைத்துக் கொண்டால், அதனால் அது தவறாக பயன்படுத்தக்கூடிய வழிமுறைகள் அடைபட்டுப் போய்விடக்கூடும். அதுவே அனைவருக்கும் நலமாகவும் இருக்க முடியும்.
#3. அரப் - இஸ்ரேலிய மோதல்கள்::
இது தொடரும். ஆக்கிரமிப்பு போக்கையும், ஆணவத்தையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும் இஸ்ரேலைக் கட்டுப்படுத்த அமெரிக்காவால் இயலாது என்பது கடந்த காலத்தில் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இனி வருங்காலத்திலும் கூட இஸ்ரேல் அவ்வாறே நடந்து கொள்ளும்.
இஸ்ரேலைச் சாடும் சத்தாம் இனி இல்லை. இனி இருப்பவர் - அஹமத் இனேஜாத். ஈரானிய அதிபர். அவர் குரல் கொடுக்கக் கூடும். அவருக்கு தொல்லை கொடுக்க அமெரிக்கா முனைந்தால், இஸ்ரேல் மீது இன்னும் அதிகமாக அவர் சாடக்கூடும். பதிலாக, இஸ்ரேல், ஈரானின் மீது ஏதாவது ஒரு சாகசத் தாக்குதலைச் செய்ய முனையக்கூடும். இதெல்லாம் ஊகங்கள் என்றாலும், மத்தியகிழக்கை நடுங்கச் செய்து கொண்டிருக்கும் ஊகங்கள்.
மேலும் பாலஸ்தீனத்தில் ஹமாஸ், பதாஹ் இடையே நிலவும் குழப்பங்கள், இன்னும் இந்தக் குழப்பத்தை அதிகப்படுத்தக் கூடும்.
இந்த வருடத்திலும் கூட மத்திய கிழக்கின் பிரச்னைகள் தீராது என்றே தோன்றுகிறது.
