Wow Gold

Monday, January 1, 2007

கடந்த காலங்களின நினைவுகளினின்றும்...

கடந்த காலங்களின்
அனைத்து நினைவுகளுடன் அழிவதினின்றும்
மீண்ட சிலவை மட்டும் தயங்கி நிற்கின்றன
இதயத்தை கீறிக் கொண்டு.

எந்த முன்முயற்சியும் அவசியமில்லை
உன்னை நினைப்பதற்கோ
அல்லது சிந்திப்பதற்கோ
ஆணையிடப்படாமலே அடித்துக் கொண்டிருக்கும்
இதயத்தின் துடிப்பைப் போல
இயல்பாய் என்னோடு இயங்கிக் கொண்டிருக்கிறது
உனது மிஞ்சிய நினைவுகள்.

ஒரு நாள் வரக்கூடும்
அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும்
இதயத்தினின்றும் மனதினின்றும்
எதுவுமே மிஞ்சப்போவதில்லை.

சாட்சியம் கூறுவதற்கேனும்
ஒரே ஒரு உயிர் அந்த வெற்றுலகில்
அந்த மரித்துப் போன உலகில்
அலைந்து திரிய அனுமதித்தால்
அந்த உயிர் சான்றுரைக்கும்
நான் உன்னை என்றென்றும்
நினைத்துக் கொண்டிருந்தேனென்பதையும்
அன்றும் கூட அழிந்த போன
அந்த பிரபஞ்சம் முழுவதும்
உன்னை துதித்துக் கொண்டிருக்கும்
எனது நினைவுகளால்
நிரம்பிக் கிடக்கிறதென்பதையும்
சான்றுரைக்கும்.
எந்தவொரு வார்த்தைகளும்
எனதன்பின் உண்மை வடிவத்தை
உன்னிடம் முழுவதுமாகத் தெரியப்படுத்தப் போவதில்லை.
உனதருகே அமர்ந்து
உன்னோடு பேசிக்கொண்டிருக்கும்
எனது இதயத்தின் மௌன மொழிகளினால் மட்டுமே
கூற இயலும்
'நான் உன்னை நேசிக்கிறேன்' என்பதை.

No comments: