Wow Gold

Monday, January 1, 2007

புது வருடத்திய பிரச்சினைகள்....

அனைவருக்கும் புது வருட வாழ்த்துகள்.

எல்லோரும் தலை தாழ்த்தி, நிலத்தை முத்தமிட்டு இறைவனை சரணடைந்து கொண்டிருந்த பொழுது, சாத்தான் தன் இருப்பை அறிவித்தான். சத்தாம் ஹுஸைனை தூக்கிலிட சந்தர்ப்பம் இது தானா, புஷ்ஷிற்கு?

நேர்மையான விசாரணை கிடையாது. தான் விரும்பிய ஒரு பொம்மை அரசை மக்கள் மீது திணித்து தனது Democratic Outlookஐ அமெரிக்கா உலகிற்கு அம்பலப்படுத்தி இருக்கிறது.

என்ன தான் இருந்தாலும் சத்தாம் ஒரு கொடுங்கோலன் தானே, அவன் தண்டிக்கப்பட வேண்டியவன் தானே என அமெரிக்க அடிவருடிகள் நிச்சயம் குரல் எழுப்பத் தான் செய்வார்கள்.

தண்டிக்கத் தான் படவேண்டும். ஆனால் அந்த நாட்டின் மக்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால். பொம்மைகளைக் கொண்டு அல்ல. அது வரையிலும் காத்திருக்க வேண்டியது மிக அவசியம்.

அமெரிக்காவிற்கு இதில் எந்த உரிமையும் கிடையாது. தங்களுடைய செய்கைகளுக்கு ஒரு நியாயம் கற்பிக்க, எப்படியாவது தங்களின் ஆக்கிரமிப்பை, இராக்கில் தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்ள என பல காரணங்களால் அவதியுற்ற அமெரிக்காவும் அவர்களது அடிவருடிகளும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றிய நாடகங்கள் தாம் இவை.

# WMD - அழிவு சாதனங்கள் இருப்பு என பொய். கடைசி வரையிலும் ஒரு கிராம் எடையளவுள்ள அழிவு பொருட்களைக் கண்டு பிடிக்க இயலவில்லை.

#அல் கொய்தா தொடர்பு - விழுந்து புரண்டு தேடியும் சதாம்மை அல் கொய்தாவுடன் இணைத்துப் பேச முடியவில்லை.

உலக நாடுகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாகிறோமே என்ற கவலையில் கடைசியாக கையில் எடுத்தது தான் - ஷியா படுகொலைகள். ஒரு ஆட்சியாளன் என்ற முறையில் கிளர்ச்சியை அடக்கும் உரிமை கிடையாதா என்ன?

சரி. அவற்றிற்கு தண்டனை உண்டு என்று ஏற்றுக் கொண்டால், புஷ் தன் ஆக்கிரமிப்பின் மூலம் இராக் மக்களுக்கு இழைத்த கொடுமைகளைப் பாருங்கள்::

# சாவு எண்ணிக்கை ---- 654,965
# அகதிகளாக
ஜோர்டானில் -- 700,000
சிரியாவில் -- 600,000
எகிப்தில் -- 100,000
ஈரானில் -- 54,000
லெபானானில்- 20,000
(தகவல்: 1.1.07 தேதியிட்ட Gulf News / Edward M Kennedy in Los Angels Time)

எத்தனை பேர் சத்தாமால் அவதியுற்றார்கள்? 188 பேர்? எத்தனை பேர் அகதிகளாக ஓடிப் போயினர் - 5000?? 10000??

அப்படியென்றால் இராக் மக்களை புஷ் மற்றும் அவரது அடிவருடிகள் எத்தனை எத்தனை கொடுமைக்குள்ளாக்கியுள்ளனர்.? இவர்களை எத்தனை தடவை தூக்கில் தொங்க விட்டால், அவர்கள் செய்த பாவம் போகும்?

ஏனென்றால், தூக்கிலிடப்பட்ட சத்தாம் ஏற்கனவே தன் இன மக்களிடையே ஒரு மாபெரும் நாயகனாக மாற்றப்பட்டுவிட்டார். சன்னி இன மக்கள் வாழும் ஒவ்வொரு ஊரிலும், அவருக்காக ஒரு சவப்பெட்டி ஊர்வலமும், தொழுகைகளும் நடத்தப்பட்டு விட்டன. அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட கூடம் "வீரத் தியாகி சத்தாம் ஹூசைன் கூடம்" என்று பெயரிடப்பட்டுவிட்டது.

ஆம் - மரணத்தில் கூட சத்தாமிடத்தில் புஷ் தோற்றுப் போனார். தன் வக்கிர புத்தியின் திருப்திக்காக தூக்கிலிட்டு, அவமானப்படுத்தி கொல்ல வேண்டும் என்று நினைத்த புஷ், இறுதியில் அவரது இன மக்களது பார்வையில் ஒரு மாபெரும் வீரனாகவும், எதிரிகளிடத்தில் வீரமரணம் அடைந்ததாகவும் ஒரு நாயக அந்தஸ்தை தேடிக் கொடுத்து விட்டார்.

சரி இனி புதுவருடத்தில் இந்த உலகின் முக்கிய பிரச்சினைகள் - புலம் பெயர்ந்த இந்த பதினைந்து லட்சம் இராக்கிகளின் புனர்வாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவரையிலும், அமெரிக்கா 202 பேருக்குத் தான் குடியுரிமை வழங்கி உள்ளது. மீதமுள்ளவர்களின் கதி? அது ஜோர்டான், சிரியா, எகிப்து, லெபனான் இவர்களது தலைவலியாக மாறக்கூடும். அதாவது, அகதிகளாக அவதியுற்று, வெறுப்புற்று நிற்கும் இந்த மக்கள் - தீவிரவாதத்திற்கு சரியான விளைநிலமாக மாறக்கூடும். ஆனால், இது ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருப்பது.

புது வருடத்தில் புதிதாக முளைக்கக்கூடிய பிரச்சினைகள் என்ன?

#1. இராக்கில் உள் நாட்டு போர் மூளும்?
சத்தாமை அழித்து விட்டதால், இராக் ஒரு போதும் இணக்கமான சூழ்நிலைக்கு மாறிவிடாது. சன்னி பிரிவினருக்கு ஆதரவாக சவுதி அரேபியா, ஷியாவிற்கு ஆதரவாக ஈரான் என இந்தப் பிரச்சினை மத்திய கிழக்கு முழுவதையும் ஒரு உச்ச பட்ச கொதிநிலையில் வைத்திருக்கக் கூடும். இத்தோடு கூட, குர்து இன மக்களுக்கு ஒரு தனி நிலம் கொடுக்கக் கூடாது என்பதில் துருக்கியும் முக்கிய பங்கு வகிக்கக் கூடும். மத்திய கிழக்கிற்கு இந்த வருடமும் கூட அமைதி திரும்பாது.

#2. ஈரானின் அணு உலைகள்:
எந்த ஒரு ஆட்சியாளானாலும், எங்கள் விருப்பத்திற்கிணங்க அவன் செயல்படாவிட்டால், எந்த ஒரு பொய் காரணத்தையாவாது சொல்லி, அவனது நாட்டை நிர்மூலமாக்கி, அவனையும் கொலை செய்வோம் என்று மத்திய கிழக்கு ஆட்சியாளார்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தி விட்டது. அந்த வரிசையில் அடுத்த இடம் பெற பெரிதும் வாய்ப்புள்ள நாடு :: ஈரான்.

தன் நாட்டில் விளையும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அடுத்த நாடுகளுக்கு விற்று அதை தனது வருமானமாக்கிக் கொண்டு, தனது உள்நாட்டுத் தேவைகளுக்காக மாற்று சக்திகளைத் தேடுவதற்கு ஈரானுக்கு உரிமை உண்டு. ஏன், as an alternative source of energy, nuclear power is the best possible way for any country. இந்த ரீதியில் ஈரானுடன் பேச முன் வராத அமெரிக்கா, தான் தன் இந்த உலகில் உள்ள அனைத்து சக்திகளுக்கும் அதிபதி என்ற வகையில் பேசவும் நடக்கவும் முற்படுவதே இப்பொழுது உலகம் எதிர்கொள்ளும் தீவிரவாதம். கவனிக்கத் தக்கது - சவூதி அரேபியாவும் இப்பொழுது அணு உலைகளில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. ஏனென்றால் உற்பத்தியாகும் எண்ணெயில், ஒரு கணிசமான தேவைக்காக உள்நாட்டிலே செலவிட வேண்டியதிருக்கிறது. எண்ணெய் மட்டும் தான் ஒரே மூல ஆதாராம் வருமானத்திற்கு என்கின்ற பொழுது, அதை சேமிக்க அதற்கு உரிமை உண்டு.

அமெரிக்கா அரபு நாடுகளுடன் கூட்டாக செயல்பட்டு, அணுசக்தியின் மூலம் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுமானால், அதனால் அமெரிக்காவிற்கும் ஆதாரம் உண்டு. அரபு நாடுகளுக்கும் ஆதாரம் உண்டு. ஆனால் அமெரிக்காவிற்கு அரபு நாடுகளின் நலனில் என்றுமே அக்கறை இருந்ததில்லை. அதன் நலன் முழுவதும் - இஸ்ரேல். இனவெறி பிடித்த அந்த நாட்டைப் பாதுகாப்பது மட்டுமே அதன் முழு நோக்கம். அணுஉலைகள் கிடைத்து விட்டால், ஆயுதங்கள் செய்வது சில மணிப்பொழுதே என்பது உண்மையென்றாலும், அத்தனை எளிதில் அதை அடுத்த நாட்டின் மீது வீசி விட முடியாது. ஏனென்றால், அதன் பின்னர், தங்கள் நாட்டில் ஒரு புல் பூண்டைக் கூட முளைக்க விடாமல் செய்து விடுவார்கள் என்பது அறிந்தே இருப்பார்கள் அனைவரும். அதனால், அவர்களாக முனைந்து அந்த அறிவைப் பெற்றுக் கொள்வதை விட, அதை அவர்களுக்கு நேர்மையான முறையில் கொடுத்து, அதை கண்காணிக்கும் பொறுப்பை அல்லது நிர்வகிக்கும் பொறுப்பை தங்கள் வசம் வைத்துக் கொண்டால், அதனால் அது தவறாக பயன்படுத்தக்கூடிய வழிமுறைகள் அடைபட்டுப் போய்விடக்கூடும். அதுவே அனைவருக்கும் நலமாகவும் இருக்க முடியும்.

#3. அரப் - இஸ்ரேலிய மோதல்கள்::
இது தொடரும். ஆக்கிரமிப்பு போக்கையும், ஆணவத்தையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும் இஸ்ரேலைக் கட்டுப்படுத்த அமெரிக்காவால் இயலாது என்பது கடந்த காலத்தில் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இனி வருங்காலத்திலும் கூட இஸ்ரேல் அவ்வாறே நடந்து கொள்ளும்.

இஸ்ரேலைச் சாடும் சத்தாம் இனி இல்லை. இனி இருப்பவர் - அஹமத் இனேஜாத். ஈரானிய அதிபர். அவர் குரல் கொடுக்கக் கூடும். அவருக்கு தொல்லை கொடுக்க அமெரிக்கா முனைந்தால், இஸ்ரேல் மீது இன்னும் அதிகமாக அவர் சாடக்கூடும். பதிலாக, இஸ்ரேல், ஈரானின் மீது ஏதாவது ஒரு சாகசத் தாக்குதலைச் செய்ய முனையக்கூடும். இதெல்லாம் ஊகங்கள் என்றாலும், மத்தியகிழக்கை நடுங்கச் செய்து கொண்டிருக்கும் ஊகங்கள்.

மேலும் பாலஸ்தீனத்தில் ஹமாஸ், பதாஹ் இடையே நிலவும் குழப்பங்கள், இன்னும் இந்தக் குழப்பத்தை அதிகப்படுத்தக் கூடும்.

இந்த வருடத்திலும் கூட மத்திய கிழக்கின் பிரச்னைகள் தீராது என்றே தோன்றுகிறது.

6 comments:

எழில் said...

வருக ஷாஜஹான்
நல்ல அலசல்.

நட்புடன்
எழில்

இப்னு ஹம்துன் said...

நண்பன் அவர்களே, நல்வரவு.

புதிதாக முளைக்கவிருக்கும் பிரச்னைகளாக நீங்கள் பட்டியலிட்டதை முன்வைத்தே.. பெரியண்ணன் இந்தக் காரியத்தை தன் அடிப்பொடிகளை வைத்து நிகழ்த்தியிருக்கிறார்.

பெரியண்ணன் இதில் இரண்டு செய்திகளை தன் ம.கி.நண்பர்களுக்கும், ஏனைய உலகத்துக்கும் தெரிவிக்கிறார்:

1). 'என்னை எதிர்ப்பவர்களின் கதி இது தான்'.

2). 'ம.கிழக்கு, நான் சொல்வதுப் போல இயங்க வேண்டும்'.

பெரியண்ணனின் இந்த அகங்காரம், ஆணவம் அனைவராலும் கண்டிக்கப்படவேண்டியதிருக்க, சத்தாம் ஹூசைன் தூக்கிலிடப்பட்டதை முன்னிட்டும் இஸ்லாம்,முஸ்லிம் என்று விருப்புவெறுப்புகளை பறைசாற்றி மகிழும் வலைப்பூ நண்பர்களை என்ன சொல்ல..?

நண்பன் said...

அன்புடன் நண்பர் எழில்,

உங்கள் வரவேற்பிற்கு மிக்க நன்றி.

அதிலும் இருமுறை வரவேற்று மகிழ்ந்த உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.

என்றாலும், நான் நண்பன் என்ற முறையிலே அறியப்பட விரும்புகிறேன் என்பதை வலைப்பூக்களில் இயங்குவோர் அனைவரும் அறிவர். அப்படி இருக்க, நீங்கள் முனைந்து முனைந்து ஷாஜஹான் என்று எழுதுவது வியப்பாக இருக்கிறது.

என்னுடைய 'என்னைப் பற்றி நான்'ல் அனைவரும் பார்க்கும் படியாக, SHAJAHAN PEER MOHAMED என்று எல்லோருக்கும் தெரியும் படியாக எழுதி வைத்திருக்கிறேன். என் அடையாளங்களை மறைக்க வேண்டும் என்று ஒரு போதும் எண்ணியதேயில்லை. அதனால், என்னைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்கள் என் profileஐப் பார்த்து தெரிந்து கொள்ளட்டுமே!

மற்றபடிக்கு, நான் எனக்கென தேடும் அடையாளம் தான் 'நண்பன்' என்ற புனைபெயர். அதைப் புறக்கணித்து, என்னை ஒரு முஸ்லிமாக மட்டுமே நீங்கள் பார்க்க விரும்புவது, உங்கள் பார்வையின் குறுகிய கண்ணோட்டமாகத் தான் இருக்குமே தவிர, நீங்கள் விரும்பும், மைய நீரோட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் இஸ்லாமியர்கள் என்ற கருத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை என்றே எண்ணுகிறேன்.

மேலும், இஸ்லாமிய பெயராக அல்லாமல், ஒரு பொதுவான தமிழ் பெயரால் என் எழுத்துகளை வெளிப்படுத்துவதை நீங்கள் அங்கீகரிக்க முற்படாதது, உங்கள் கருத்துகளில் ஒரு உள்நோக்கம் கொண்டே நீங்கள் பிறரை அணுகுவதாக நான் கருதுகிறேன்.

இனியாவது, இதை கருத்தில் கொள்வீர்கள் என்றே எண்ணுகிறேன். ஒரு எழுத்தாளன் எந்தப் பெயரில் தான் அறியப்பட விரும்புகிறானோ, அந்தப் பெயரிலே அவனை அழையுங்கள் - அதுவே அவனுக்குச் நீங்கள் செய்யும் மரியாதையாக இருக்கும்.

அவ்வாறில்லாமல், அவனது மத இன மொழி அடையாளங்களைத் தேடி அதன் மூலமே அழைப்பது என்று கங்கணம் கட்டி செயல் படுவது - இன்னமும் வர்ண பேதங்களைக் கைவிட நீங்கள் முன்வரவில்லையோ என்ற எண்ணத்தையும், ஆயாசத்தையும் தருகிறது.

பொது இடங்களில், சற்று - சற்று இணக்கமாக நடந்து கொள்ளுங்கள் நண்பரே!!!

நண்பன் said...

அன்பிற்கினிய இப்னு ஹம்துன்,

உங்கள் கருத்துகள் நான் எழுதியவற்றையே அமைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.

மேலும் ஒரு தகவலை இங்கு அனைவரின் பார்வைக்கும் வைக்கின்றேன்.

இராக்கின் தலைவர்களின் கதியைப் பாருங்கள்

மன்னர் காஸி - 1933ல் மன்னரானார். தந்தை ஃபைசல் I. காஸியை மன்னராக்கியது பிரிட்டிஷ் படை. ஆறு வருடங்கள் கழித்து மர்மமான முறையில் கார் விபத்தொன்றில் காலமானார்.

பக்ர் சித்திகி - 1936ல் ராணுவப் புரட்சியை நடத்தியவர். 1937ல் ராணுவத்தாலே சுட்டுக் கொல்லப்பட்டார்.

மன்னர் ஃபைசல் II - 1958ல் தன் அரண்மனையில் ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். உடன் மரணம் அடைந்தவர்கள் அவரது மகன் - அப்துல் அல்லா - பட்டத்து இளவரசன் மற்றும் நூரி அல் சைத்- பிரதம மந்திரி.

அப்துல் கரிம் காஸெம் - 1958 - இராக் குடியரசானது. இவரை ஒரு ராணுவ புரட்சியில் சத்தாம் கொல்ல முயற்சித்தார். முடியவில்லை. என்றாலும் 1963ல் நடந்த ராணுவ புரட்சியில் உயிரிழந்தார்.

அப்த் சலாம் முகம்மத் ஆரிஃப் - 1963 புரட்சிக்குப் பின் பிரசிடெண்ட் ஆனார். முதல் வேலையாக சத்தாமை கைது செய்து சிறையிலடைத்தார். 1966ல் விமான விபத்தில் மரணமடைந்தார்.

அப்த் அல் ரஹ்மான் முகம்மத் ஆரிஃப் - சகோதரனைத் தொடர்ந்து வந்தவர். 1968ல் பாத் கட்சியினர் மேற்கொண்ட புரட்சியினால் பதவி இழந்து நாடு கடத்தப்பட்டார்.

அஹ்மத் ஹாசன் அல் பக்ர் - 1968ல் பிரசிடெண்ட் ஆனார் சத்தாமின் தயவோடு. ஆனால் ஆட்சி புரிந்தது என்னவோ பின்னிலிருந்து சத்தாம் தான். 1979ல் முற்றிலுமாக சத்தாம் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு, இவரை விலக்கி விட்டார். 1982ல் மரணமடைந்தார். விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது ஊகம்.

சத்தாம் ஹுசைன் - 1979 முதல் இன்று வரையிலும் - 1982ல் அவரைக் கொல்ல நடந்த முயற்சி தோல்வியடைந்தது. ஆனால், அந்த முயற்சியை மேற்கொண்டவர்களுக்கு அவர் வழங்கிய தண்டனையே பிற்பாடு - 24 வருடங்களுக்குப் பின் அவர் மரணத்திற்குக் காரணமாகி இருக்கின்றது.

இராக்கிய ஆட்சியாளர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சற்று கவனத்துடனும் சற்று கடூரத்துடனும் நடந்து கொண்டால் மட்டுமே சாத்தியம். சத்தாமும் அதைத் தான் செய்தார். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் எடுத்த நடவடிக்கைகளே அவரைக் குற்றவாளியாக்கி இருக்கிறது.

இனி ஆட்சியாளார்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள திருவாளர் புஷ் அவர்களிடம் ஆலோசனைக் கேட்டுக் கொண்டு பின்னர் அதன் படி செயல்படலாம் - அதுவரையிலும் உயிரைக் கையில் பிடித்து வைத்துக் கொள்ள முடிந்தால்.

சுதந்திரதேவிக்கு சிலை வைத்தவர்கள், அதன் கையில் கொடுத்த தீபத்தை இன்று கொள்ளிக் கட்டையாக வளர வைத்து விட்டார்கள். சுதந்திரம் என்பதை தங்களுக்கு மட்டுமே உரித்தான தனிச் சொத்தாக அமெரிக்கர்கள் கருதுவார்கள். நவீன தீண்டாமையைக் கடைபிடிப்பார்கள் - அந்த நவீன தீண்டாமையின் பெயர் - பொருளாதாரத் தடை. அமுல் படுத்திக் கொடுப்பதற்கு ஒரு ஏவலாளி வேண்டுமே - அதன் பெயர் ஐ.நா. சபை.

அமெரிக்க ஏகாதிபத்யம் தன் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

எழில் said...

நண்பன் அவர்களே,
நிச்சயம் உங்களது கருத்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. ஷாஜஹான் என்ற பெயரில் நீங்கள் இங்கே அழைக்கபபடவிரும்பவில்லை என்று கூறியிருந்தால், எனது பாராட்டுதலை மாற்றி எழுதியிருப்பேன்.
//நான் நண்பன் என்ற முறையிலே அறியப்பட விரும்புகிறேன் என்பதை வலைப்பூக்களில் இயங்குவோர் அனைவரும் அறிவர்.//

நான் வலைக்கு புதிது. எனக்கு தெரியாது.


//அவனது மத இன மொழி அடையாளங்களைத் தேடி அதன் மூலமே அழைப்பது என்று கங்கணம் கட்டி செயல் படுவது - இன்னமும் வர்ண பேதங்களைக் கைவிட நீங்கள் முன்வரவில்லையோ என்ற எண்ணத்தையும், ஆயாசத்தையும் தருகிறது.//

இது கொஞ்சம் அதிகம். அப்படியெல்லாம் நீங்களாக நினைத்துக்கொள்வது வருத்தத்துக்குரியது.

இங்கே என்னை நண்பன் என்ற பெயரில் அழையுங்கள் என்று ஒருவரியில் முடித்துவிட்டு போயிருக்கலாம். நானும் திருத்திக்கொண்டிருப்பேன். இதனை வேறொரு நபராக இருந்தால், நான் நண்பன் என்று அழைத்திருந்தால், எனது மத இன அடையாளத்தை அழிக்க நினைக்கிறீர்கள் என்று அவர் பதிலெழுதி இருக்க முடியும்

நட்புடன்
எழில்

நண்பன் said...

கொஞ்சம் அதிகப்படி என்று தான் தோன்றுகிறது. நீக்கிவிடலாமா என்று கூட நினைத்தேன். ஆனால், ஒரு முறை பதிந்த பின் பலரும் படித்திருக்கக் கூடும். பின்னர் மாற்றுவதால், நம்பகத் தன்மை குறையக் கூடும் என்பதால் விட்டு வைத்தேன்.

மேலும், நான் விரும்பாவிட்டாலும், என்னை ஷாஜஹான் என்றே பலரும் அழைக்க விரும்புவதாக தெரிகிறது. இந்த விஷயத்தில் என்னால் மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்பதையும் நான் அறிவேன். அப்படி இருக்கும் பொழுது உங்களை மட்டும் சாடியது தவறு.

இனி அவரவர் விருப்பம்....

நன்றி..

அன்புடன்

நண்பன்...